Thursday, September 25, 2008

458. கெட்ட போலீஸும் நல்ல போலீஸும்

இரண்டு வாரங்களுக்கு முன் ஜுனியர் விகடனில் வந்த கட்டுரை இது. இதை வாசித்தவுடன் மனது சற்றே கலங்கி விட்டது என்றாலும், பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு தக்க சமயத்தில் உதவிய ஜு.வி பத்திரிகையையும், உடனடி நடவடிக்கை எடுத்த காவல் அதிகாரியையும் மனதார பாராட்ட வேண்டும். வாசியுங்கள்:
*************************************************************
சில நாட்களுக்கு முன்பு நம்முடைய அலுவலக தொலைபேசி நீண்ட நேரம் அலற... எடுத்து ஹலோ சொன்னோம்.

உடைந்து சிதறியது ஒரு குரல்...

''சார் என் பெயர் அனுராதா... சென்னை எழும்பூரில் இருந்து பேசறேன். போன்ல பேசமுடியாத நிலைமை. எக்மோர் ரயில்வே ஸ்டேஷன் வர்றீங்களா?''

-அந்தக் குரலில் தெரிந்த பதற்றத்துக்கு மதிப்பளித்து எழும்பூர் விரைந்தோம். போனில் சொன்ன அடையாளங் களோடு அனுராதாவை சந்தித்தோம்.

''சார், இதை சொல்றதுல எனக்கு அவமானமோ கூச்சமோ இல்ல. சொல்லப்போனா,

இந்த சமூகம்தான் கூச்சப்படணும். அஞ்சு வருஷத்துக்கு முந்தி நான் விபசாரத் தொழில் செஞ்சேன். என் கணவர் தெனமும் குடிச்சுக்கிட்டே இருப்பாரு. ரெண்டு பெண் குழந்தைங்களைக் காப்பாத்தறதுக்கு வேற வழி தெரியாம ஒரு வேலைக்குப் போனேன். அங்கே என்னை வற்புறுத்தி இந்தத் தொழில்ல இறக்கிட்டாங்க.

உடம்பு முழுசும் உறுத்தலோடுதான் இந்த தொழிலையே செஞ்சேன். என் கணவர் திருந்தி வேலைக்கு போக ஆரம்பிச்சாரு. நானும் இந்தத் தொழிலை விட்டுட்டேன். நாலு வருஷமா வேற நல்ல வேலைக்குப் போய்க்கிட்டு இருக்கேன். எல்லாத்தையும் மறந்து என் வாழ்க்கையில கொஞ்சநாள்தான் நிம்மதியா இருந்தேன். ஆனா...'' என்ற அனுராதாவின் கண்கள் ஈரங்கோத்தன.

''போன ஆகஸ்ட் 25-ம் தேதி, சாயங்காலம் 6.30 மணிக்கு இரண்டு பேரு வீட்டுக் கதவைத் தட்டினாங்க. கதவைத் திறந்ததுமே உள்ள நுழைஞ்சு, 'நாங்க போலீஸ§. வீட்டை சோதனை போடனுணும்'னு சொன்னாங்க. என் பொண்ணுங்க படிச்சுக்கிட்டு இருந்துச்சுங்க. திடீர்னு அந்த ரூமை வெளிப்பக்கமா தாழ்ப்பாள் போட்டாங்க. 'சார், என் பொண்ணுங்க சத்தியமா சொல்றேன்... நான் தொழிலை விட்டுட்டேன். என்னை நம்புங்க'னு சொன்னேன். அதுல ஒருத்தர், பளாருன்னு கன்னத்துல அடிச்சாரு. 'ஏண்டி... பத்தினி வேஷம் போடறியா? உன் பசங்க படிக்கற ஸ்கூல்ல போய், நீ யாருன்னு சொல்லவா'னு மிரட்டினாரு. 'இந்த வீட்டை சீல் வச்சுட்டு, உன் மேல் கேஸ் போட்டா என்ன பண்ணுவ? நீதான் தொழில் செய்யறீயே, மாமூல் தரமாட்டீயா?'னு கேட்டாங்க. அழுது புரண்டேன். பீரோ சாவியைக் கேட்டாங்க. அது திறந்துதான் இருக்குன்னு சொன்னேன். அதுலருந்த ஏழாயிரம் ரூபாயை எடுத்துக்கிட்டாங்க. 'இது பத்தாது, மொத்தமா அஞ்சு லட்சம் கொடுடி'னு கேட்டாங்க. அவ்ளோ இல்லைன்னு சொன்னதும், மூணு லட்சம் கேட்டாங்க. கடைசியா, ஒரு லட்சம் கேட் டாங்க. பணமே இல்லைன்னு பேங்க் பாஸ் புத்தகத்தையும் காட்டிட்டேன்.

கடைசியில கழுத்துல கெடந்த தாலி செயினைக்கூட அந்தப் பாவிங்க விடல. வீட்டுக்கு வெளியே போய் இருங்கன்னு சொல்லிட்டு, பொண்ணுங்க படிச்சுக்கிட்டு இருந்த ரூமுக்கு போனேன். பெரியம்மா வீட்டு வரைக் கும் போயிட்டு வந்துடறதா சொல்லி, வெளியே இருந்த ஆளுங்களோட ஆட்டோவுல போனேன். தாலி சங்கிலியை வித்து, 30 ஆயிரத்து 450 ரூபாய் கொடுத்தேன். எனக்கு ஆட்டோவுக்காக 100 ரூபாய் கொடுத்தாங்க. வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் போன் செஞ்சி 'நாளைக்கு 70 ஆயிரம் தரணும். இல்லன்னா, உன் வீட்டுக்காரன்கிட்டேயும் பசங்ககிட்டேயும் விஷயத்தை சொல்லிடுவோம்'னு மிரட்டினாங்க. வேற வழியில்லாமதான் சார், உங்களுக்கு போன் பண்றேன். போலீஸ§க்குப் போனா, எனக்கு வழி கிடைக்காது'' என்ற அனுராதாவின் கண்ணீருக்கு அணை போட முடியவில்லை.

அனுராதாவின் அவலத்தை உடனே மத்திய சென்னை போலீஸ் இணை கமிஷனர் பாலசுப்பிரமணியத்துக்குத் தெரியப்படுத்தினோம். அனுராதாவிடம் போன் செய்து, 70 ஆயிரம் ரூபாய் கேட்டவனின் மொபைல் எண்ணைப் பெற்று, இணை கமிஷனரிடம் கொடுத்தோம்.

அவர் எடுத்த துரித நடவடிக்கையால், மறுநாள் 26-ம் தேதி இரவே விபசார தடுப்புப் பிரிவு போலீஸ்காரர் களான பாஸ்கரன், மனோகரன் இருவரும் பிடிபட்டனர். அதிர்ந்துபோன இணை கமிஷனர், உடனடியாக கமிஷனர் சேகர் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்றார்.

தொடர்ந்த விசாரணையில்... அந்த போலீஸாரோடு வக்கீல் ஒருவரும் சிக்கினார். அவர் தற்போது ஒரு அரசு வக்கீலிடம் ஜூனியராக இருந்து வருகிறார். நடந்த சம்பவங்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டார் கமிஷனர் சேகர். இந்த விசாரணையை, மத்திய குற்றப் பிரிவு துணை கமிஷனர் விஜயகுமாரி நடத்தி முடித்து, கமிஷனருக்கு அறிக்கையாக கொடுத்திருக்கிறார்.

அனுராதாவிடம் இருந்து, 'பணப்பறிப்பு' செய்தது ஊர்ஜிதமானதும் உடனடி நடவடிக்கையாக பாஸ்கரன், மனோகரன் உட்பட சம்பந்தப்பட்ட பிரிவு இன்ஸ்பெக்டர் உதயகுமார், தலைமைக் காவலர்கள் அரிகிருஷ்ணன், குமார் ஆகியோர் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பாஸ்கரனும், மனோகரனும் அனுராதாவின் வீட்டில் எடுத்த ஏழாயிரம் ரூபாயையும், மார்வாடி கடையில் விற்கப்பட்ட தாலி சங்கிலியையும் போலீஸார் மீட்டு அனுராதாவிடமே கொடுத்து விட்டார்கள்.

இதுவேதான், அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவில் இருக்கும் பியூட்டி பார்லரில் ஏற்கெனவே பணம் கேட்டு மிரட்டி மாட்டிக்கொண்ட கும்பலாம்.

நடவடிக்கைக்கு நன்றி சொல்லி, இணை கமிஷனர் பாலசுப்பிரமணியத்திடம் நாம் பேசியபோது, ''விசாரணை தொடர்கிறது. அதன் முடிவில், வேறு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார் உறுதியாக.

'மனசாட்சியை விற்றுப் பிழைக்கிற கேவலத்தைவிடவா கொடியது விபசாரம்?' என்ற கேள்விதான் நமக்குள் எழுகிறது!

நன்றி: ஜுனியர் விகடன்

4 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

test !

dondu(#11168674346665545885) said...

//பாஸ்கரன், மனோகரன் உட்பட சம்பந்தப்பட்ட பிரிவு இன்ஸ்பெக்டர் உதயகுமார், தலைமைக் காவலர்கள் அரிகிருஷ்ணன், குமார் ஆகியோர் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டிருக்கிறார்கள்.//
சஸ்பெண்ட் அல்லவா செய்திருக்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muthu said...

//சஸ்பெண்ட் அல்லவா செய்திருக்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

டிஸ்மிஸ் அல்லவா செய்திருக்க வேண்டும்

said...

Expecting a post on Mohali "Test" (ur favourite) and Sachin's 12K runs ..

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails